இந்திய இழுவை மடி படகுகள் தொடர்பான பிரச்சினைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடமும் , தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்துள்ள நடிகர் விஜயிடமும் கோரிக்கை விடுப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் ஊடக மாநாட்டிலேயே சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்திய தமிழ் நாட்டு தொப்புள் கொடி உறவோடும், வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தொப்புள் கொடி உறவோடும் நாங்கள் எதிர்காலத்தில் இணைந்து பயணிக்க ஆவலாக இருக்கின்றோம்.
இரண்டு நாட்டு தொப்புள் கொடி உறவுக்கும் இடையிலே தடையாக இருக்கின்றது தமிழ் நாட்டை சேர்ந்த 2500 இழுவை மடிப்படகுகள். இரண்டு அரசாங்கத்தினாலும் 2016 ஆம் ஆண்டு இழுவை மடி முறையை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் அது நிறுத்தப்படவில்லை. தொடர்ந்தும் எல்லை தாண்டிய சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள்.
சட்ட விரோத மீன்பிடியை நிறுத்துவதற்கு இரு நாட்டு மீனவ சங்கங்களும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை திரும்பப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மீனவர் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு தீர்வினை பெற்றுத்தருவதாக தெரியவில்லை. எனவே ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறையுடன் செயற்படும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழக கட்சியினை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் இவ்விடயத்தில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்” என தெரிவித்தார்.