கெஹலியவின் கைதுக்கு பசிலா காரணம்?

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய கெஹலிய கைதுசெய்யப்பட்டதுடன், அவருக்கு எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கெஹலியவின் கைதுக்கு பசிலே காரணம்

இந்திய கடன் திட்டத்தில் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு கையொப்பமிட்டது கெஹலிய ரம்புக்வெல்ல அல்ல, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவே என ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கெஹலிய சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய போதே அவர் இந்தக் கருத்தை கூறியுள்ளார்.

”இந்திய கடன் திட்டத்தின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்யும் திட்டத்தில் கையெழுத்திட்டது அப்போதைய நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவே அன்றி கெஹலிய ரம்புக்வெல்ல அல்ல.

மருந்து கொள்முதல் செயல்முறையை தனியாருக்கு வழங்கியதும் அப்போதைய நிதி அமைச்சுதான். முதல் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கெஹலிய எந்த தவறும் செய்யவில்லை.” என சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

பசிலுக்கு எதிராக விசாரணை?

பசில் ராஜபக்ச இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது.

பசில் ராஜபக்சவுக்கும் இந்த மோசடியில் தொடர்புகள் உள்ளனவா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற வேண்டுமென எதிர்க்கட்சிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

என்றாலும், இந்திய நிதித் திட்டத்துக்கு மாத்திரமே பசில் ராஜபக்ச அனுமதியளித்திருந்தார். அந்த நிதி பயன்பாடுகள் மற்றும் அதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதிக்கும் பசிலுக்கும் தொடர்பில்லை என ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வழக்கு மீதான விசாரணை மீண்டும் 15ஆம் திகதி எடுத்துக்கொள்ள உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin