அண்மையில் காலமான தனது கணவரால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் அரசியலில் ஈடுபடுவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிப்பதாக மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் குடும்பத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி சாமரி பிரியங்கா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
- எனது கணவர் புத்தளம் மாவட்டத்திற்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் சேவையை ஆற்றியுள்ளார்.
- அவரிடம் உதவி கேட்ட எவரும் வெறுங்கையுடன் அனுப்பப்படவில்லை.
- அவர் இப்போது இல்லாதது ஒரு கனவு போல இருக்கிறது.
- மறைந்த கணவரின் தனிப்பட்ட செயலாளராக இருந்தும், அவரது அரசியல் விவகாரங்களை நிர்வகித்து வந்தாலும், அப்போது அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை.
- எவ்வாறெனினும் புத்தளம் மாவட்ட மக்களும், நாட்டு மக்களும், கட்சித் தலைமையும் எனது கணவரின் வெற்றிடத்தை நிரப்பி அவருக்குப் பதிலாக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால், நான் அதை பரிசீலிக்கலாம்.
- எனது நான்கு குழந்தைகளின் எதிர்காலம் குறித்து இப்போது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது – என்றார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஜனவரி 25 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருவரும் ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், இருவரும் சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், வாகனத்தின் சாரதி இந்த விபத்தில் உயிர் தப்பினார்.
சில ஊடகங்களில் சனத் நிஸாந்தவின் வெற்றிடத்தை நிரப்ப அவரது மனைவியான சாமரி பிரியங்கா அரசியலுக்கு வருவார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே சாமரி பிரியங்காவின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.