சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை: கண் கலங்கி நின்ற லாரா

அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவுஸ்திரேலிய மண்ணில் இளம் வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி யோசிக்க முடியாத ஒன்றை செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் கோட்டையென கருதப்படும் கப்பாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தின் பரபரப்பான இறுதித் தருணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி எட்டு ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இதன் போது வர்ணனை செய்துகொண்டிருந்த கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா, இந்த வெற்றியை ” மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரிய நாள்” என்று விவரித்தபோது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்.

மேற்கிந்திய தீவுகளின் ஷமர் ஜோசப் ஜோஷ் ஹேசில்வுட்டின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி வெற்றியை உறுதிசெய்த போது சக வர்ணனையாளர் ஆடம் கில்கிறிஸ்ட்டை பிரைன் லாரா தழுவிக் கொண்டார்.

“நம்ப முடியவில்லை. அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 27 ஆண்டுகள் ஆகிறது. இளம் அனுபவமற்ற, இந்த மேற்கிந்திய தீவுகள் அணி இன்று தலை நிமிர்ந்து நிற்கும்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டில் ஒரு பெரிய நாள். ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்” என்று வர்ணனையாளர் மார்க் ஹோவர்ட் பகிர்ந்துள்ள காணொளியில் பிரைன் லாரா கூறுவதைக் காணமுடிகின்றது.

கடைசி இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 207 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடியான 91 ஓட்டங்கள் வீண் போனது. ஜோஷ் ஹேசில்வுட்டின் விக்கெட்டை வீழ்த்திய போது ஸ்மித் மறுமுனையில் களத்தில் இருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி கடைசியாக 1997ஆம் ஆண்டு பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin