கட்சியின் நடவடிக்கைகள் சம்பந்தமாக பொய்யான செய்திகளை வெளியிடும் நபர்களை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்க முடியுமா என்பதை அறிந்துக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
கட்நத காலங்களில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக பொய்யான செய்திகள் வெளியாகியதாகவும் அவற்றை வெளியிட்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் போனதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த வருடம் தேர்தல் வருடம் என்பதால், கட்சி மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்கள், கட்சியின் தேர்தல் பிரசாரங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்,இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், பொய்யான செய்திகளை பரப்புவோரை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்க முடியுமா என்பது குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கலந்துரையாட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.