காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கின் விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கனடாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்த்துறை ஆலோசகர் ஜோடி தோமஸ் தெரிவித்துள்ளார்.
ஜோடி தோமஸ் நேற்று வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும போது அவர் இதனை கூறியுள்ளார்.
நிஜ்ஜார் கொலை சம்பந்தமான விசாரணைகளுக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மீண்டும் வலுவடையும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் நகர்ந்து வருகின்றன.
நிஜ்ஜார் கொலை வழக்கை ஒருங்கிணைந்த புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. விசாரணை சுமூகமாக நடைபெற இந்தியா கனடாவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது என ஜோடி தோமஸ் கூறியுள்ளார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவின் றோ அமைப்புக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அப்போது அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் இரு நாடுகளும் இடையில் ராஜதந்திர பிரச்சினைகள் ஏற்பட்டதுடன் இரு நாடுகளும் பரஸ்பரம் ராஜதந்திரிகளை வெளியேற்றின.இந்த ராஜதந்திர பிரச்சினை தற்போது சுமூகமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.