புத்தளம் – கற்பிட்டி, இப்பந்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சங்குகளை பிடித்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய கடற்படையினரால் கற்பிட்டி இப்பந்தீவு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 1856 சங்குகளும் , டிங்கி இயந்திர படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான படகொன்று கற்பிட்டி, இப்பந்தீவு கடற்பகுதியில் இருப்பதை அவதானித்த கடற்படையினர், குறித்த படகினை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி, சட்டவிரோதமாக சங்குகளை பிடித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சங்குகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.