“நெருக்கடிகளுக்கூடான வழிகள்” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறை, இந்தியாவின் சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து இன்றைய தினம் சனிக்கிழமை (27.01.24) மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28.01.24) ஆகிய இரு நாட்களும் இந்த மாநாட்டை நடாத்துகின்றது.
இம்மாநாட்டின் நோக்கங்களாக சட்டப் பரப்பில் அதிகம் பேசப்படாத விடயங்ளைப் பேசுதல், பன்மைத்துவ ஆய்வை ஊக்குவித்தல், அவ்வகை ஆய்வு முயற்சிகளை கலந்துரையாடுவதற்கான களமொன்றை அமைத்தல், சட்டப் புலமையாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரையும் அவர்களின் ஆய்வுச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்தல், எழுத்திலுள்ள சட்டத்திற்கும் அதன் செயற்பாட்டிற்குமான இடைவெளியைக் குறைத்தல், சட்ட மாணவர்களுக்கு சடடத்துறை சார் ஆய்வுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் துறைசார் நிபுணர்களுடனான வலையமைப்பை ஏற்படுத்தல் ஆகிய பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம், ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவிச் செயலாளரும் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதி ராதிகா குமாரசுவாமி, ஜனாதிபதி சடடத்தரணி கலாநிதி கனகேஸ்வரன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சொர்ணராஜா, கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.