இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் அவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
பிரசன்ன ரணதுங்க, மகிந்தானந்த அளுத்கமகே, இந்திக்க அனுருத்த, சி.பி.ரத்நாயக்க, நாமல் ராஜபக்ஷ, டி.வி.சானக்க உள்ளிட்டவர்களும் சனத் நிஷாந்தவின் வீட்டிற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்திருந்த நிலையில், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அமைச்சர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
ராகம போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொது முன்னணியின் முக்கியஸ்தர்கள் ஆராச்சிக்கட்டுவவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ளனர்.
சனத் நிஷாந்தவின் மரணத்தின் பின்னர் இன்று அதிகாலை முதல் அமைச்சர்கள் பலரும் அவரது சடலம் வைக்கப்பட்டுள்ள ராகம வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த விபத்தில் அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் உயிரிழந்துள்ளதுடன் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
நெடுஞ்சாலையின் ரி 11.01 கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான ஜீப் வீதியின் தடுப்புச்சுவரில் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது மெய்ப்பாதுகாவலராக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது சாரதி ஆகியோர் விபத்தில் படுகாயமடைந்த ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சாரதி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகம போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1975 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் திகதி ஹலவத்தையில் பிறந்த சனத் நிஷாந்த பெரேரா நான்கு சகோதர சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது நபராவார்.
அலாவத்தை புனித மரியாள் ஆண்கள் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், 1997 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு போட்டியிட்டு தேர்தல் அரசியலில் பிரவேசித்தார்.
2004ஆம் ஆண்டு முதல் வடமேற்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய சனத் நிஷாந்த, முதலமைச்சர் பதவிக்கு இணையாக அமைச்சுப் பதவியையும் வகித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து போட்டியிட்டு 68,240 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாவதாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், மீன்பிடி இராஜாங்க அமைச்சராக பதவியேற்று, அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளராகவும் திகழ்ந்தார்.
அவரது மனைவி சட்டத்தரணி என்பதுடன், மூன்று பெண் பிள்ளைளும், ஒரு ஆண் பிள்ளையும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.