அத்தனகல நீதவான் நீதிமன்றத்தில் சேவையாற்றும் இளம் சட்டத்தரணி ஒருவரை நீதிமன்றத்தில் இருந்து கலகெடிஹேன பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று சட்டத்தரணி, பெண் சட்டத்தரணிகள் உட்பட 5 பேர் பொது இடத்தில் வைத்து தாக்கிய சம்பவம் குறித்து இன்று முறைப்பாடு கிடைத்துள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவை பிரதேசத்தை சேர்ந்த இளம் சட்டத்தரணியே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சட்டத்தரணி சில காலம் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவருக்கு கீழ் சேவையாற்றியுள்ளார். பின்னர் இருவரும் பிரிந்து தனித்தனியாக தொழிலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், இருவருக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அன்றைய தினமே இரண்டு பெண் சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்தரணியின் கணவர் ஆகியோர் இளம் சட்டத்தரணியின் வீட்டுக்கு சென்று அவரது தந்தையை மிரட்டியுள்ளனர்.
அத்துடன் இளம் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கடமையில் இருந்த போது அன்றைய தினம் வேறு ஒரு நீதிமன்றத்தில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவர் வந்து, இளம் சட்டத்தரணியை காரில் அழைத்துச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.