தென்கொரியாவில் பிறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் தத்தெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அப்படி தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் ஒன்று யூன்-ஹிவா.
1974ஆம் ஆண்டில் தென்கொரியாவில் யூன்-ஹிவாவாக பிறந்த அவர், நெதர்லாந்தில் ஒரு வயதாகும்போது பெட்ரா ஸ்வார்ட் என அழைக்கப்பட்டார்.
டச்சு குடும்பத்தினர் அவரையும் அவரது ஐந்து வயது சகோதரரையும் அன்பாக வரவேற்று ஆர்வமாக தத்தெடுத்துக் கொண்டனர். நெதர்லாந்தில் இருந்தாலும் அவரது தோற்றத்தை மாற்ற முடியவில்லை. கிழக்கு ஆசியரைப் போன்று இருந்ததால் ஒரு குழுந்தையாக வளர்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
1953ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் ஏறக்குறைய 170,000 தென்கொரிய குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டன. இதற்கு உள்நாட்டிலேயே பலத்த எதிர்ப்பு இருந்தாலும் வெளிநாட்டுத் தத்தெடுப்பு சம்பவங்கள் குறையவில்லை.
2022ஆம் ஆண்டில் சுமார் 142 கொரிய குழந்தைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில் இன்னமும் ஏன் தத்தெடுப்பு சம்பவங்கள் நடக்கின்றன என்று ஸ்வார்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தென்கொரியா தற்போது செழிப்பான நாடாகிவிட்டது. வேற்று இன தத்தெடுப்பு சம்பவங்களின் விளைவுகளை அறிந்துள்ளோம். குழந்தையின் நலனுக்காக தத்தெடுக்கப்படுவது இல்லை. வேறு அணுகுமுறை ஏதாவது இருக்கிறதா,” என்று அவர் கேட்டுள்ளார்.
2021இல் வெளிநாடுகளுக்கு தத்தெடுப்பிற்காக குழந்தைகளை அனுப்பிய நாடுகளில் தென்கொரியா ஐந்தாவது இடத்தில் இருந்ததாக ஆய்வு ஒன்று தெரிவித்தது.
தென்கொரிய வரலாற்றைப் பார்த்தால் 1953ஆம் ஆண்டிலிருந்தே குழந்தைகள் தத்தெடுப்பிற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அப்போதைய கொரிய போரில் ஏராளமான குழந்தைகள் வீடுகளையும் பெற்றோரையும் இழந்து அனாதைகளாகினர்.
போர் சூழல் அல்லது இயற்கைப் பேரிடர் காரணமாக குறுகிய காலத்தில் அதிக குழந்தைகள் தத்தெடுக்கப்படுவது வழக்கத்திற்கு மாறானது அல்ல. ஆனால் தற்போது தென்கொரிய நிலைத்தன்மையோடு இருந்தாலும் வெளிநாட்டு தத்தெடுப்பு குறையவில்லை.
1985ல் உச்சக்கட்டமாக 8,837 தென்கொரிய குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டன. இது, நாட்டில் அந்த ஆண்டு பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிடும்போது 1.35 விழுக்காடாகும். இதனை குழந்தை விற்பனை என்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்