விண்வெளி வானிலையை அலட்சியம் செய்யாதீர்கள்’ – காஸ்மிக் கதிர்களால் முடங்கிய ஏர்பஸ் A320 விமானங்கள்!
சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள், விமானத்தின் “பறக்கும் கட்டுப்பாட்டுக் கருவிகளில்” (Flight Controls) உள்ள முக்கியத் தரவுகளைச் சிதைக்கும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, தனது விமானங்களில் ஒரு பகுதியைத் தரையிறக்கி நிறுத்தி வைத்துள்ளது ஏர்பஸ் நிறுவனம்.
சூரியனின் சீற்றத்தால் ஸ்தம்பித்த விமானங்கள்
விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களுக்கு முன்னால் நவீன விமானங்களும் நிலைகுலைந்து போயுள்ளன. சூரியக் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உற்பத்தி ரீதியான குறைபாட்டைச் சரிசெய்ய, கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) ஏர்பஸ் நிறுவனம் தனது 6,000 ‘ஏ320’ ரக விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் நடந்த ஒரு விமானச் சம்பவம், சூரியக் கதிர்வீச்சுகளுக்கு முன்னால் விமானங்கள் எவ்வளவு பலவீனமானவை என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது.
இதுகுறித்து ‘ஆகூரா ஸ்பேஸ்’ (Augura Space) நிறுவனத்தின் நிறுவனரும், விண்வெளி வானிலை நிபுணருமான ஃபிரான்சுவா ஃபினிஸ்டி கூறுகையில், “இது ஒன்றும் நூற்றாண்டின் மிகப்பெரிய சூரியப் புயல் கிடையாது; இருப்பினும், நாம் பயன்படுத்தும் விமானங்களில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்த்தோம்,” என்கிறார்.
சூரியனிலிருந்து வரும் துகள்கள், ‘சூரியக் காற்று’ (Solar wind) மூலமாகப் பூமிக்கு வருகின்றன. இவை செயற்கைக்கோள்களை மட்டுமல்லாமல், தாழ்வான உயரத்தில் பறக்கும் விமானங்களின் எலக்ட்ரானிக் அமைப்புகளையும் அடிக்கடி பாதிக்கின்றன. ஆனால், எல்லாத் துகள்களும் ஆபத்தானவை அல்ல. பூமியின் காந்தப்புலத்தையும் மீறி, மிக அதிவேகத்தில் வரும் துகள்களே ஆபத்தை விளைவிக்கின்றன.
ஜெட்-ப்ளூ விமானத்திற்கு நேர்ந்த திகில் அனுபவம்
ஏர்பஸ் நிறுவனத்தின் இந்தத் அதிரடி முடிவுக்குக் காரணம், கடந்த அக்டோபர் 30-ம் திகதி நடந்த ஒரு சம்பவம். அமெரிக்காவின் நியூவார்க்கிலிருந்து மெக்சிகோவின் கன்குன் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஜெட்-ப்ளூ (JetBlue) விமானம் 1230, நடுவானில் பறக்கும்போது கட்டுப்பாட்டை இழந்தது. விமானிகளின் எந்தத் தலையீடுமின்றி, விமானம் திடீரென மூக்குத்தி குத்தித் தரையை நோக்கிப் பாய்ந்தது. நல்லவேளையாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, புளோரிடாவில் விமானம் தரையிறக்கப்பட்டது.
இதை ஒரு “தனித்துவமான நிகழ்வு” (Singular event) என்று குறிப்பிடுகிறார் ஃபினிஸ்டி.
0 மற்றும் 1-ல் விளையாடிய விண்வெளித் துகள் (Bitflip)
அந்த விமானத்தில் உண்மையில் என்ன நடந்தது? அதிக ஆற்றல் கொண்ட ஒரு நுண் துகள், விமானத்தின் எலக்ட்ரானிக் பாகத்திற்குள் ஊடுருவியதால் ‘பிட்ஃபிளிப்’ (Bitflip) என்ற நிலை ஏற்பட்டது. அதாவது, கணினி மொழியில் ‘0’ என்று இருக்க வேண்டியது ‘1’ ஆகவோ, அல்லது ‘1’ என்பது ‘0’ ஆகவோ மாறிப்போனது. இந்தச் சிறிய மாற்றம், இயந்திரத்தின் செயல்பாட்டையே தலைகீழாக மாற்றிவிட்டது.
இந்தச் சூரியக் கதிர்கள் அரோரா (Aurora) எனப்படும் அழகிய ஒளியைத் தருவதுடன் நில்லாமல், விமானப் போக்குவரத்தை நிலைகுலையச் செய்யும் வல்லமை கொண்டவை. இதுகுறித்து நிபுணர் எச்சரிப்பதாவது: “இந்தக் கதிர்வீச்சுகள் விமானங்களின் இருப்பிடத்தைக் காட்டும் ஜிபிஎஸ் (GPS) கருவிகளையும், தகவல் தொடர்பு சாதனங்களையும் செயலிழக்கச் செய்யும். இதனால் விமானங்கள் கண் தெரியாத, காது கேட்காத, பேச முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம்.”
எலக்ட்ரோனிக் பாகங்கள் அளவில் சிறியதாக மாற மாற (Miniaturization), அவை விண்வெளித் துகள்களின் தாக்கத்திற்கு எளிதில் சிக்குவதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார்.
இந்தப் பிரச்னையைச் சமாளிக்க, ஏர்பஸ் நிறுவனம் தனது மென்பொருளில் புதிய மாற்றங்களைச் (Software update) செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதுவரை பழைய மென்பொருளைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விண்வெளி வானிலையால் விமானத் துறையில் ஏற்படும் இழப்பு சாதாரணமானது அல்ல. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) ஆய்வின்படி, இது போன்ற காரணங்களால் ஏற்படும் தாமதங்கள் மற்றும் ரத்துகளால் ஆண்டுதோறும் சுமார் 1.3 பில்லியன் யூரோ இழப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. ஏர்பஸ்ஸின் இந்த முடிவால், ஏர் பிரான்ஸ் நிறுவனம் மட்டும் வெள்ளிக்கிழமை அன்று 35 விமானங்களை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

