புதிய தலைவரை ஆசிர்வதித்தார் சம்பந்தன்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது சம்பந்தன் ஐயா, தனக்கு வாழ்த்து கூறியதாக சிறிதரன் எம்.பி எமது செய்திப் பிரிவிடம் கூறினார்.

74 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட இலங்கை தமிழரசு கட்சியிக்கு முதல் முறையாக தேர்தல் ஒன்றின் மூலம் தலைவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அடுத்த வாரம் கட்சியின் மாநாடு இடம்பெறவுள்ள நிலையில், தலைவரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் நேற்று திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் சிறிதரன் எம்.பி கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிபெற்று தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சிறிதரன் எம்.பிக்கு ஆதரவாக 184 வாக்குகளும், சுமந்திரன் எம்.பிக்கு ஆதரவாக 137 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

இந்த வெற்றியைத் தொடர்ந்து கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்ற சிறிதரன் எம்.பி கார்த்திகை மலர் வைத்து மாவீரர்களுக்கு மரியாதைச் செலுத்தினார்.

இந்த வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சிறிதரன் எம்.பி தமிழ் தேசியத்தை பாதுகாப்பதுடன், கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து பயணிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இதனிடையே, உட்கட்சி தேர்தல் மூலம் நாட்டிற்கும், சர்வதேசத்திற்கு ஒரு சிறந்த ஜனநாயகத்தை எடுத்துக்காட்டியுள்ளதாக சக போட்டியாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

தமக்கு இடையில் எவ்வித பிரிவுகளும், வேறுபாடுகளும் இல்லையெனவும், ஒற்றுமையுடன் தொடர்ந்தும் பயணிப்போம் எனவும் அவர் கூறியிருந்தார்.

சிறிதரன் எம்.பியின் வெற்றிக்கு பல்வேறு தரப்பினர்களும் வாழ்த்துகளை கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin