சிரிய தலைநகர் மீது விமான குண்டு தாக்குதல் நடத்தி ஈரானின் பாதுகாப்புப்படையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட காரணமான இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உறுதியாக கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் சிரிய இராணுவத்தினர் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் பதிலளிக்கவில்லை. சிரியாவில், ஈரான் சம்பந்தப்பட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஆரம்பித்த பின்னர், இந்த தாக்குதல் மேலும் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், தாக்குதலில் உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக ஈரான் ஜனாதிபதி தனது இணையத்தளம் வழியாக கூறியுள்ளார்.
தாக்குதலுக்கு பழிக்குப்பழி வாங்குவோம். ஈரானின் புகழ்மிக்க இராணுவ ஆலோகர்கள், கோழைத்தனமதக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது பயங்கரவாதம் மற்றும் குற்றச் செயல.இது இஸ்ரேலின் விரக்தியின் உச்சத்தையும் பலவீனத்தையும் காட்டுகிறது. இதற்கு பதிலளிக்காமல் விடப்போவதில்லை எனவும் ஈரான் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதனிடையே இந்த தாக்குதல், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆத்திரமூட்டும் செயல் என ஈரான் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இஸ்ரேலின் இந்த செயலை கண்டிக்குமாறு அமைச்சு, சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் பிரதான இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையினர், கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் ஆரம்பித்தில் இருந்து சிரியாவில் தங்கியுள்ளனர்.
சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக பரவி போராட்டத்தில், அசாத்திற்கு உதவவே ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையினர் அங்கு நிலைக்கொண்டுள்ளனர்.