இலங்கைப் பிரஜைகளை 39 பேரை கனடாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இந்தியாவிற்கு மனிதக் கடத்தல் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது இந்திய தேசிய புலனாய்வுத்துறை (என்ஐஏ) நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்ட முகமது இம்ரான் கான் என்கிற இம்ரான், அபுல் கான், முகமது இப்ராகிம் என்ற அகமது மற்றும் புதுமடம் இம்ரான் ஆகியோர் மீதே கடத்தல், சிறைப்படுத்துதல் மற்றும் சதி செய்தல் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், 39 இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக பொய் வாக்குறுதி அளித்து தமிழகம் வழியாக மங்களூருவுக்கு கடத்தலில் ஈடுபட்டுள்ளதுடன், மங்களூரு முழுவதும் உள்ள பல்வேறு தங்குவிடுதிகளில் இவர்களை தடுத்துவைத்திருந்துள்ளனர்.
இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை கர்நாடக காவல்துறை முதலில் கைது செய்திருந்ததுடன், பின்னர் இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை 13 ஜூலை 2021 அன்று என்ஐஏ ஆரம்பித்தது. கைதுசெய்யப்பட்ட 39 பேரும் மனித கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை என்ஐஏ கண்டறிந்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளுக்கு எதிராக விசாரணைகள் கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித கடத்தல்களுக்கு உள்ளானவர்கள் விடுவிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஈசன் என்பவருடன் சேர்ந்து புதுமடம் இம்ரான் மனித கடத்தலில் ஈடுபடும் சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாக என்ஐஏவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்களுடன் கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக பொய் வாக்குறுதி அளிக்கப்பட்டே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.