பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதை தடுத்து நிறுத்தும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், சட்டமா அதிபர், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஒருவருக்கு கொடூரமான சித்திரவதை கொடுக்கப்பட்ட நிலையில், அந்த நபர் தாக்கல் செய்த அடிப்படைமனித உரிமை மீறல் வழக்கல் தேசபந்து தென்னகோனுக்கு இழப்பீடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் கோட்டாகோகம போராட்ட களத்தின் மீது தாக்குதல் நடத்த சென்றவர்களை தடுத்து நிறுத்த தவறினார் எனவும் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இப்படியான நிலைமையில், தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தால், சட்டம் வீழ்ச்சியடையும் என்பதுடன் அதன் ஊடாக மக்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படலாம் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனால், இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதி வழங்குமாறு அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என அறிவித்து,தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் முஜிபுர் ரஹ்மான் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.