நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபனில் தனது 100 ஆவது ஆட்டத்தில் டோமஸ் மார்ட்டின் எட்செவெரியை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று 3 ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் ஆர்ஜென்டீனாவின் தாமஸ் மார்ட்டின் எட்செவரி உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 30 ஆவது நிலை வீரரை 6-3 6-3 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
இது அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சின் 100-ஆவது போட்டியாக அமைந்துள்ளது. 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோகோவிச் அதில் 92-ல் வெற்றி பெற்றுள்ளார்.
இதில் நடைபெற்ற மற்ற ஆட்டங்களில் அலெக்ஸ் டி மினார் (அவுஸ்திரேலியா), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), லெசியா சுரென்கோ (உக்ரைன்) உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-0 மற்றும் 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4 ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பெண்கள் பிரிவில் மற்ற ஆட்டங்களில் கோகோ கவூப் (அமெரிக்கா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.