சந்திரனில் தரையிறங்குவதற்காக கடந்த வாரம் அனுப்பப்பட்ட அமெரிக்க விண்கலம் பசுபிக் பகுதியில் தீப்பிடித்து எரிந்த நிலையில் வீழ்ந்து அதன் பணியை முடித்துக் கொண்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோபோடிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நிலவு குறித்த ஆய்வுக்காக கடந்த 8 ஆம் திகதி பெரெக்ரைன் ஒன் என்ற குறித்த விண்கலத்தை புளோரிடாவில் இருந்து ஏவியது.
எனினும், ஏவுகணையில் இருந்து விண்கலம் பிரிந்த சிறிது நேரத்தில் அதில் வெடிப்பு ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.
பெரெக்ரைன் ஒன் ஒரு உந்துவிசை பிழையால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் அதனை தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்படி கட்டளையிடப்பட்டது.
விண்கலம் வியாழன் (18) அன்று அவுஸ்திரேலியாவின் கிழக்கே தெற்கு பசுபிக் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில் வீழ்ந்தது.
நாசாவுடனான ஒப்பந்தத்தின் கீழ் பெரெக்ரைன் விண்கலத்தை உருவாக்கிய பிட்ஸ்பர்க்கை தளமாகக் கொண்ட ஆஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜி நிறுவனம், விண்கலத்தின் அழிவை உறுதிசெய்தது.
நாசாவுடனான புதிய தனியார்-பொது கூட்டாண்மையின் கீழ் இந்த ஆண்டு நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய மூன்று அமெரிக்க நிறுவனங்களில் ஆஸ்ட்ரோபோடிக் முதல் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.