அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கிராண்ஸ்லாம் போட்டிகளுக்கு மீண்டும் திரும்பியுள்ள ஜப்பானின் நவோமி ஒசாகா பிரான்சின் கரோலின் கார்சியாவுடனான முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளார்.
இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஒசாகா, 2022 செப்டம்பரில் நடந்த அமெரிக்க ஓபனுக்கு பின்னர், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 6-4 7-6 (7-2) என்ற கணக்கில் 16 ஆம் நிலை வீராங்கனையிடம் தோல்வியைத் தழுவினார்.
இந்த தோல்வி குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், ஆட்டத்தில் என்னால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்ததைப் போல் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த தொடரில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து முன்னணி வீரர் ஆண்டி முர்ரே அர்ஜெண்டினா வீரர் டோமஸ் மார்ட்டினுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் 36 வயதான ஆண்டி முர்ரே 6-4 6-2 6-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தார்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடக்கிறது.
இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச், ஆண்டி ரூபலேவ், சின்னர் ஆகியோர் வெற்றிபெற்று 2 ஆவது சுற்றுக்கு முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது.