பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் என்பது தமது தனிப்பட்ட நம்பிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான தருணத்தில் இல்லை எனவும், இவ்வாறான சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் நாடு மேலும் அதலபாதாளத்தில் தள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ;
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு கட்சி என்ன செய்கிறது என எல்லோரும் கேட்கிறார்கள். மொட்டு கட்சி இதுவரை வேட்பாளரை தெரிவுசெய்யவில்லை என்பதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன். வேட்பாளரை முன்வைப்பதா இல்லையா என்பது குறித்து கட்சி ஆலோசித்து வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக நாட்டை ஆள்வதற்கான தகுதியை அவர் பெற்றுள்ளார்” என தெரிவித்துள்ளார்.