நாட்டிலுள்ள அனைத்துப் பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில், புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமையவே, நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாட சாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
“நாட்டில் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த வகையில், தற்போது மாணவர் ஒருவருக்காக ஒதுக்கப்படும் தொகையை 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அதிகரிக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
“அதன்படி, நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் திட்டத்தை செயற்படுத்தவிருக்கின்றோம். தோட்ட பாடசாலைகள் தவிர்ந்த பாலர் பாடசாலைகளில் மட்டும் 120,000 மாணவர்கள் உள்ளனர். தோட்டப்பாலர் பாடசாலைகளில் இருக்கும் 35,000 மாணவர்களும் உள்ளடங்களாக 155,000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர்.
பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
இதேவேளை, பாலர் பாடசாலை ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கபடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
“நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் பாலர் பருவகால மேம்பாடு தொடர்பிலான தேசிய செயலாளர் அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும்18,333 பாலர் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளனர்.
“அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பாலர் பாடசாலைகளை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் 2500 ரூபாயை வழங்கவும், அதுபோதுமான தொகை இல்லை என்பதால் அதனை மேலும்அதிகரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்” என அவர் மேலும் கூறினார். என்றார்.