ஆசிய கிண்ண டி20 தொடரின் நேற்றைய தினம் (01-09-2022) இடம்பெற்ற 5 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் ஹபிப் ஹொசைன் அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். மெஹிதி ஹசன் 38 ஓட்டங்களையும், மொஹமதுல்லாஹ் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) மற்றும் சாமிக்க கருணாரத்ன (Chamika Karunaratne) ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.
இதற்கமைய, பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குசல் மெந்திஸ் 60 ஓட்டங்களையும் அணித்தலைவர் தசுன் சானக 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் வேகபந்து வீச்சாளர் எபடோட் ஹொசைன் (Ebadot Hossain ) 3 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.