புத்தரின் மறு அவதாரம் என்றுக் கூறிக்கொண்ட ஆன்மீகவாதி ராம் பகதூர் போம்ஜோன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்மண்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
33 வயதான ராம் பகதூர் போம்ஜோன் காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CIB) தெரிவித்துள்ளது.
பல்வேறு நபர்கள் காணாமல் போனமை மற்றும் அவரது ஆசிரமங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக காத்மண்டு பொலிஸார் தெரிவித்தனர்.
“Buddha Boy” என்று அழைக்கப்படும் ராம் பகதூர் போம்ஜன், நீர், உணவு மற்றும் தூக்கம் இல்லாமல் மாதக்கணக்கில் தியானம் செய்ய முடியும் என்று கூறிய பின்னணியில் இளைஞராக இருந்த போது மிகவும் பிரபலமடைந்தார்.
எவ்வாறாயினும், அவரைப் பின்பற்றுபவர்களை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்துவந்தார்.
நேபாள தலைநகரின் தென் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் காத்மண்டு பொலிஸார் அவரை கைது செய்துள்ளது.
2010ஆம் ஆண்டில், போம்ஜோனுக்கு எதிராக பொலிஸில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தனது தியானத்திற்கு இடையூறு செய்ததால் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2018 ஆம் ஆண்டில், 18 வயதான யுவதி ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போம்ஜோனுக்கு எதிராக குற்றம் சாட்டினார்.
அடுத்த ஆண்டு, அவரது ஆசிரமம் ஒன்றில் இருந்து நான்கு பேர் காணாமல் போனதாக குடும்பத்தினர் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணையை முடக்கிவிட்டனர்.
எவ்வாறாயினும், காணாமல் போன நால்வர் குறித்த தகவல்கள் தெரியவில்லை என மத்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.