ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி வவுனியாவுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது நில அபகரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக கலந்துரையாடினோம். இன்னும் பல விடயங்களை தொடர்பிலும் ஆராயப்பட்டது.
நாம் கூறும் விடயங்கள் உடனடியாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் சென்றிருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. நாங்கள் கேட்ட விடயங்களுக்கு சரியான பதிலை ஜனாதிபதி வழங்கவில்லை.
சம்பிரதாய பூர்வமான ஒரு கூட்டமாகவே இது நடைபெற்றது. பல அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டாலுங்கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.
ஜனாதிபதி வந்துசென்ற பின்னர் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இராணுவமுகாம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
அது என்ன தேவைக்காக அமைக்கப்பட்டது என்ற விடயம் தெரியவில்லை. எமது மக்களை அச்சுறுத்துவதற்கான செயற்பாடாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியுடனும் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கலந்துரையாடுவதற்கு முயற்சிப்போம்” என தெரிவித்தார்.