யாழ்ப்பாணத்தில் 86 கோடியே 45 இலட்ச ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மூன்று பொதிகள் காணப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் , அந்த பொதிகளை சோதனை செய்தனர்.
அதில் இருந்து 48 கிலோ நிறை கொண்ட அபின் போதைப்பொருளும், 28 கிலோ நிறை கொண்ட கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 86 கோடி ரூபாய் எனவும் கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வடமாகாணத்தில் அபின் போதைப்பொருள் பாரியளவில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.