முதலில் தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தல்

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள எந்த தேர்தலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் செட்டிபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அடுத்த ஆண்டு இடம்பெறும் தேர்தல்களில் வெற்றிப்பெற்றால் மாத்திரமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆட்சி அதிகாரத்தை பெறமுடியும். இருப்பினும் பாராளுமன்றத்தில் மூன்று ஆசனங்களை வைத்துக்கொண்டு தாம் விரும்பிய அனைத்து சட்டமூலங்களையும் மொட்டு கட்சியினரை வைத்துக்கொண்டு அமுல்படுத்துகிறார்.

ஆனால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் மாத்திரம் மௌனிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்திலும் தமிழ் மக்களுக்கு ரணிலின் ஆட்சியில் திருப்தி ஏற்படவில்லை. இதன்காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்கிய மிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. இது தேர்தல் காலங்களில் வாக்கு பதிவில் எம்மை தாக்கும்.

ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலக்கட்டத்தில்கூட தமிழ் தரப்பின் மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினைக்கேனும் இன்றுவரை தீர்வு வழங்கப்படவில்லை. நல்லிணக்க சட்டமூலத்தின் ஊடாக நஷ்ட ஈடு வழங்கும் நடவடிக்கை மாத்திரமே தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி எல்லா நேரங்களிலும் தந்திரமான விடையங்களில் ஈடுப்படுபவர். எவ்வாறு மொட்டுடன் இணைந்து தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் நாலா தரப்பிலும் ஆராய்ந்து கொண்டிருப்பார்.

அதன் காரணமாகவே தமிழ் தரப்பின் ஆதரவினை பெற்று தேர்தலில் வெற்றிபெறுவதற்கே வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் முதலாவதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருக்கான தேர்தலே இடம்பெறும். பொதுச் சபை உறுப்பினர்கள் மூலமே தலைவர் தெரிவு இடம்பெறும்.

எந்த தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம். பொதுதேர்தலை எதிர்கொள்ள தமிழரசுக்கட்சியின் கை நாலாபுறமும் பலம் பொருந்தியதாகவே உள்ளது என்பதில் சந்தேமமில்லை. அனைத்து மாவட்டங்களிலும் எம் பலம் உயர்ந்துள்ளது.” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin