ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பை நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாள் விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
தனது விஜயத்தின் போது பல்வேறு தரப்பினர்களையும் ஜனாதிபதி சந்தித்து வருகின்றார்.
இதன் ஒருபகுதியாக யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (06) முற்பகல் யாழ்.மாவட்ட சர்வ மதத் தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியிருந்தார்.
இதில் சர்வ மதங்களை சார்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர். எனினும், இந்த கலந்துரையாடலில் நல்லை ஆதீன குரு முதல்வர் கலந்துகொள்ளவில்லை.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும், நல்லை ஆதீனத்தின் செயலாளருமான ஆறு திருமுருகன், “நல்லை ஆதீன குரு முதல்வர் பிறிதொரு இடத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவை இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கைகளுக்கு எந்தவித தீர்வும் வழங்கப்படவில்லை என்பதனால் இனியும் ஜனாதிபதியுடன் பேசி பிரயோசனம் இல்லை என்பதால் சந்திப்பை புறக்கணித்தோம்.
கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லை ஆதீனத்தில் நல்லை ஆதீன குரு முதல்வருடன் என்னையும் சந்தித்திருந்தார்.
அதன் போது பல விடயங்களை நாங்கள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தோம். அவற்றை உடனடியாகவே செயற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அதில் எந்த விடயமும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
அதன் காரணமாகவே யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.