இலங்கையில் உள்ள அனைத்து டிப்போக்களிலும், சில சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நிதி மோசடியினால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சர் பந்துல குணவர்தன யாழ்ப்பாணம் கோண்டாவில் அமைந்துள்ள வடக்கு பிராந்திய அலுவலகம் மற்றும் யாழ். டிப்போவில் இலங்கை போக்குவரத்து சபையின் வடகிழக்கு பிராந்தியங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்குவது தொடர்பான விசேட அவதானிப்பில் கலந்துகொண்டார்.
டிப்போ வளாகத்தில் அதன் நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலும் அமைச்சர் ஈடுபட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர்,
“இந்த அமைச்சின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அரசியல் சார்புகளுக்காகவும், உறவுமுறைகளுக்காகவும் பதவிகளை வழங்குவதற்குப் பதிலாக, போக்குவரத்து சபை உள்ளிட்ட போக்குவரத்து துறைசார் நிறுவனங்களின் தலைவர்களாக துறைசார் அறிவுள்ள நிபுணர்களை நியமித்துள்ளோம்.
இவற்றின் மூலம் திருட்டு, மோசடி, ஊழல், முறைகேடுகளைத் தடுப்பது எங்களது முதல் கொள்கையாகும். இலங்கையில் உள்ள அனைத்து டிப்போக்களிலும், சில சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நிதி மோசடியினால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுகிறது.
இந்த நிதி முறைகேடுகள் அனைத்தையும் விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிரடிப்படையின் ஓய்வுபெற்ற டிஐஜி தலைமையில் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முறைப்பாடுகள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த சில மாதங்களில் போக்குவரத்து சபையின் பேருந்துகளிலும் இ-டிக்கெட் முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் மேலும் நிதி முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும். எனவே, நிறுவனம் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக மோசடி மற்றும் ஊழலின்றி ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்வரும் காலங்களில் டிப்போவின் வருமானத்தில் பணம் செலுத்தும் அடிப்படையில் ஆயிரம் புதிய பஸ்களை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிறுவனங்களை இலாபகரமாக மாற்றுவதன் மூலம், தற்போதுள்ள பணியாளர் காலியிடங்களுக்கு தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் புதிய ஆட்சேர்ப்பு செய்ய வாய்ப்பு உள்ளது.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.