ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம் முறையாவது எமது கோரிக்கையை கருத்திற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
“கடந்த ஆண்டும் இதேபோன்று தைப்பொங்கல் தினத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தோம். அவரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவுமே தற்போது வரையில் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் தாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை உடன் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஒரு வருடத்திற்கு பின்னரும் எமது கோரிக்கைகள் நீரில் எழுதிய எழுத்துகளாவே இருக்கின்றன.
இம்முறையாவது அவற்றை கருத்திற்கொண்டு மனிதாபிமான ரீதியில் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வாருங்கள்.
தாங்கள் பதவியேற்றவுடன் விரைவில் தமிழினத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதாக பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் எவ்வித முயற்சியும் நடைபெறுவதாக தெரியவில்லை. தமிழினம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.