ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே நபர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு இணைந்து கொள்ளும் எவருக்கும் எந்த அமைச்சுகளோ, பதவிகளோ வழங்கப்படாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 60 ஆவது கட்டமாக கெஸ்பேவ ஸ்ரீ சுதர்சன் மாதிரி பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
வரப்பிரசாதங்கள், சலுகைகளை வழங்கி உறுப்பினர்களை தக்கவைத்தல் மற்றும் சேர்த்துக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படாது. இந்த கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
சோசலிசம், தீவிர இடதுசாரிகள், கம்யூனிசம், முதலாளித்துவம் ஆகியவற்றால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இதற்கு சமூக ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட மனிதாபிமான முதலாளித்துவம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
எமது கூட்டணியை அமைப்பதில் வரப்பிரசாதங்கள் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது. கொள்கைகளுக்கு அமைய நாட்டுக்கு சேவையாற்றக்கூடியவர்களே உள்வாங்கப்படுவார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
சில காலத்துக்கு முன்னர் கட்சி மாறிவிடுவார்கள் என்ற சந்தேகத்தில் ஐ.தே.கவின் எம்.பி.க்கள் 18 பேர் கொண்ட குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் அப்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூருக்கு அனுப்பி சொகுசு ஹோட்டல் ஒன்றில் தங்கவைத்திருந்தார்.
இந்த 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் விமானக் கட்டணம் மற்றும் ஹோட்டல் கட்டணங்களைச் செலுத்தி பல நாட்கள் இவ்வாறு தங்கவைத்திருந்தார். நாம் அவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபட மாட்டோம். எவருக்கும் சலுகைகளை வழங்க மாட்டோம். கொள்கையின் பிரகாரமே இணங்குபவர்களே எம்முடன் இணைவார்கள்.” என்றார்.