யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளின் பின்னால் சதி நடவடிக்கை என எண்ணத் தோன்றுவதாக யாழ்ப்பாண மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் கந்தையா தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாபாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் கடந்த 3 வருடங்களாக உருளைக்கிழங்கு செய்கையினை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது.
அதாவது கொரோனா மற்றும் சேதன உரத் தட்டுப்பாடு காரணமாகவும் உருளைக்கிழங்கு செய்கை பாதிக்கப்பட்டது.
இவ்வருடமும் உருளைக் கிழங்கு செய்கைக்காக கொண்டுவரப்பட்ட விதை உருளைக் கிழங்குகள் பற்றீரியா நோய்த் தாக்கத்தால் அழிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை விவசாய நிலங்களை கடந்த 6மாதங்களாக பண்படுத்திய நிலையில் தற்போது உடனடியாக உருளைக் கிழங்கு இல்லை என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
யாழிற்கு கொண்டுவரப்பட்ட பக்ரீரியாக்களுடன் கூடிய உருளைக் கிழங்குகளின் பின்னணியில் சதி நடவடிக்கையா என எண்ணத் தோன்றுகிறது.
அடுத்த வருடமாவது யாழ் மாவட்டத்தில் 150 ஹெக்டேரில் உருளைக் கிழங்கு செய்கையை மேற்கொள்ள தரமான உருளைக்கிழங்கு விதைகளை 50 வீத மானிய அடிப்படையில் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்