மியன்மாரில் இணைய மோசடியாளர்களின் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் அவசர தலையீடு மற்றும் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மாரின் பிரதிப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று பிற்பகல் தொலைபேசியூடாக தொடர்புகொண்டிருந்தார். இதன்போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரின் மியாவாடி பிரதேசத்தில் மனித கடத்தலால் பாதிக்கப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் இதன்போது மேலதிகமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சர் மியன்மார் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு அந்நாட்டு அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பை வெளிவிவகார அமைச்சும் நாடியுள்ளது.
வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்த தகவலின்படி, சைபர் குற்றங்களுக்காக மனித கடத்தலுக்கு ஆளான 56 இலங்கை பிரஜைகள் சட்டவிரோதமாக மியாவாடி பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் அமைச்சகம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக வெளிவிவிகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.