ஜப்பான் நிலநடுக்கத்தில் 48 பேர் உயிரிழப்பு

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்பு பணியாளர்கள் உரிய இடத்தினை அடைவதற்கு கடும் சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புத்தாண்டு தினமான நேற்று பிற்பகல் ஜப்பானில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிறி அளவிலாக சுனாமி அலைகள் ஏற்பட்டதுடன், வாகனங்கள் மற்றும் வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு இராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய 3,000 பேர் கொண்ட மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த பகுதிக்கு செல்வதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் ரயில் சேவைகள் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஓடுபாதையில் ஏற்பட்ட விரிசல் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்ததால் மூடப்பட்ட நோட்டோ விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர்.

நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் வசிக்கும் கடற்கரை நகரமான சுசூவில், 1,000 வீடுகள் வரை அழிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 48 பேரின் மரணங்களை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நிலநடுக்கத்தை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள 33,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 22 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வசதி இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin