எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

நாம் இணைந்து அமைக்கும் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார். நாம் கட்டியெழுப்பும் பிரதான கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலானது என சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

”சுதந்திர மக்கள் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் 2022 ஜூலை 20 அன்று இணைய முடிவு செய்தது. சுதந்திர மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள கட்சிகளுடன் இணைந்து பொதுக் கூட்டணியை உருவாக்க முடிவெடுத்துள்ளோம்.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய ஜனதா பலவேகய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சுதந்திர மக்கள் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. பல அரசியல் கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட ஒப்புக்கொண்டன. ஆனால், தேர்தலுக்காக ஒன்றிணைவதற்கு உடன்படவில்லை.

எதிர்க்கட்சி ஏனைய அரசியல் கட்சிகளுடன் அமைக்கும் கூட்டணியை விரைவில் அமைக்க வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தில் எந்த தேர்தல் முதலில் வரும் என்று தெரியவில்லை. பாராளுமன்றத் தேர்தலுக்குப் போதுமான சமிக்ஞை இருக்கிறது. இது ஐக்கிய மக்கள் சக்தியால் உருவாக்கப்பட்டதாகும்.

எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவில்லை. மாறாக அரசாங்கத்தில் இருந்துதான் அமைச்சர்கள் எதிர்க்கட்சியுடன் இணைகிறார்கள். அதனால் அரசாங்கத்தின் போக்கை அனைவரும் அறிந்துக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதே நோக்கம் என்றால், இணைவு அவசியமாகும்.” எனவும் டிலான் பெரேரா தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin