வடக்கில் 90 வீத குற்ற செயல்கள் கட்டுக்குள்

வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், குறித்த சந்தேக நபர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஜூன் மாத காலப்பகுதிக்குள் வடக்கில் போதைப்பொருள் ஒழிக்கப்படும்.

தற்போது போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் நுகர்வு ஆகியவற்றில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றோம்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

கைது நடவடிக்கையினால் வடக்கில் 90 வீத குற்ற செயல்கள் சடுதியாக குறைந்துள்ளன.

குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் தொடர்புடையவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் பெயரிடப்பட்டுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் செயற்பாடுகளை ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளனர். அதற்குரிய நடவடிக்கைகள் வடக்கிலும் முன்னெடுக்கப்படுகின்றன.

போதைப்பொருள் விற்பனை செய்வோர் தொடர்பாக 0718598834 (யாழ்ப்பாணம்), 0718598835 (காங்கேசன்துறை), 0718598836 (வவுனியா), 0718598837 (மன்னார்), 0718598838 (கிளிநொச்சி), 0718598839 (முல்லைத்தீவு) என்ற இலக்கங்களுக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த முடியும்.

குற்றச்செயல்கள் தொடர்பில் புலப்படுத்துபவர்களின் விபரங்களின் இரகசியத் தன்மை பேணப்படும். எனவே பொதுமக்கள் அச்சமின்றி தகவல்களை வழங்க முடியும். மேலும் வடமாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திலும் நேரடியாக முறையிடலாம்” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin