கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியை கொளரவப்படுததும் வகையில் அவர் அணிந்து விளையாடும் 10ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த புகழ்பெற்ற கால்பந்து வீரரான டியாகோ மரடோனாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் 10ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வு வழங்க முயற்சித்த பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.
பழம்பெரும் வீரர் மரடோனாவைப் போலவே, சம காலத்தில் மிகச்சிறந்தவராகக் கருதப்படும் மெஸ்ஸி வரலாற்றில் மிகவும் சிறந்த கால்பந்து வீரராக இருப்பதுடன், அவரும் 10 இலக்க ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றார்.
டியாகோ மரடோனா கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் அப்போதைய தலைவர் ஜூலியோ க்ரோண்டோனா உள்ளிட்டவர்கள் 10ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வு வழங்க முடிவு செய்தனர்.
எனினும், உலகக் கிண்ணம் உள்ளிட்ட உயர்மட்ட போட்டிகளில் ஒவ்வொரு அணியும் 1 முதல் 23 வரையிலான ஜெர்சி எண்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டளையிடும் விதியைக் கருத்தில் கொண்டு பீஃபா அவர்களின் கோரிக்கையை நிராகரித்தது.
இதனையடுத்து 10ஆம் இலக்க ஜெர்சி மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு கத்தாரில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டியின் போது பிரான்ஸ் அணியை வீழ்த்தி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வெற்றிபெற்றது.
அத்துடன், 2021ஆம் ஆண்டு கோபா கிண்ணத்தையும் அர்ஜென்டினா அணிக்கு மெஸ்ஸி பெற்றுக்கொடுத்திருந்தார். இந்நிலையிலேயே மெஸ்ஸியின் 10ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
“தேசிய அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெறும்போது, அவருக்குப் பிறகு வேறு யாரையும் 10ஆம் இலக்க ஜெர்சியை அணிய அனுமதிக்க மாட்டோம். இந்த ’10’ இலக்கத்திற்கு அவரது நினைவாக வாழ்நாள் முழுவதும் ஓய்வு வழங்கப்படும்.
இது மெஸ்ஸிக்கு நாங்கள் செய்யக்கூடிய குறைந்தபட்சம்” என்று அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் தலைவர் டாபியா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுவரை தனது தேசிய அணிக்காக 180 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி 106 கோல்களை அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.