சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த தம்மிக்க பெரேரா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகரும், பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தமிழ் மற்றும் முஸ்லிம் தேசிய கட்சிகளுடன் தொடர் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இரண்டு தமிழ் கட்சிகள் மற்றும் ஒரு முஸ்லிம் கட்சி தலைவர்களுடன் தம்மிக பெரேரா கலந்துரையாடியதாகத் தெரியவருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாகவும் ஆனால் அது குறித்த மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியாது எனவும் தம்மிக்க பெரேரா தரப்பு குறிப்பிட்டுள்ளது.

கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட தம்மிக்க பெரேரா நாம் ஒன்றுபட்டால் இந் நாட்டை அபிவிருத்தியை நோக்கிக் கொண்டுசெல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 2024இல், நீங்கள் அனைவரும் ஒரு முடிவை எடுக்கவேண்டும். நாட்டின் எதிர்காலம் குறித்து அந்த முடிவு அமையவேண்டும்.

எமது பாரம்பரிய முறைமையிலிருந்து வெளியே வந்து அந்த முடிவை எடுக்க வேண்டும். எமது பிள்ளைகள் இருக்க விரும்பும் நாடொன்றை நாம் அமைக்கப்போகிறோமா, இல்லை எமது பிள்ளைகள் செல்ல விரும்பும் நாடொன்றை உருவாக்கப்போகிறோமா என்று சிந்திக்க வேண்டும்.

நாங்கள் ஒன்றிணைந்தால், இந்த நாட்டை அபிவிருத்தியை நோக்கிக் கொண்டுசெல்ல முடியும்.

எமது நாட்டில், 57 இலட்சம் குடும்பங்கள் காணப்படுகின்றன. அந்தக் குடும்பங்களை சந்தோசமாக வைத்திருக்க முடிந்தால், இலங்கையிலுள்ள நாம் அனைவரும் சந்தோசமாக இருக்க முடியும்.

குடும்பமாக நாங்கள் எப்படி சந்தோசமாக இருக்க முடியுமென்பதை நாங்களும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்று ஒரு குடும்பத்துக்கான வருமானத்தை மூன்று மடங்காக அதிகரிக்க முடியுமாயின், எமது நாடு ஒரு வளர்ச்சியடைந்த நாடாகும். கிராமங்களுக்கு பணத்தை ஈர்க்க வேண்டுமாயின், தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகள் உருவாக்கி, கிராமங்களுக்கு பணம் கிடைத்தால்தான், கிராமத்தை அபிவிருத்தி செய்யமுடியும். அவ்வாறான தொழில்வாய்ப்புக்களைத் தேட வேண்டுமாயின், இவ்வாறான தொழில்நுட்பக் கல்விக் கண்காட்சிகளை நடத்த வேண்டும்.

மகிழ்ச்சியான குடும்பம் என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, ஒரு குடும்பமாக எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் கற்றுக்கொள்ளவில்லை என்றால், நாளை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. படிப்பை நிறுத்தினால் இன்னும் பத்து வருடத்தில் இந்த நாடு எங்கே இருக்கும் என்று தெரியவில்லை. அதாவது நாம் அனைவரும் தினமும் கற்றுக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும்.

வரலாற்றில் நாம், ஆடை அணிவது மற்றும் சாப்பிடுவதை மாத்திரம்தான் செய்துவந்தோம். ஆனால் இப்போது, பொருளாதாரம் பெரிய அளவில் உள்ளது.

நெல் உற்பத்தியை எடுத்துக் கொண்டால், அது நம் நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தில் ஒரு சதவீதம். நம் நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் காய்கறி சாகுபடி ஒரு சதவீதம். நம் நாட்டின் விவசாயத் தொழிலை 17 பகுதிகளாகப் பிரிக்கலாம்.

ஆனால் இப்போது யாராவது வந்து விவசாயத்தால் நாட்டை வளர்க்க முடியுமா என்று கேட்டால், நிச்சயமாக அதை செய்ய முடியாது. ஏனெனில், அரசர்கள் இந்நாட்டை ஆண்ட போது ஆறு இலட்சம் என்ற சிறு தொகைக்கே உணவு வழங்கினர். அது இப்போது சாத்தியமில்லை.

இப்போது 220 இலட்சம் பேருக்கு உணவளிக்க வேண்டும். அதனால்தான் நான் எப்போதும் சொல்வது ஒரு கிராமத்தின் ஒரு பகுதி கல்வியின் மூலம் உயர வேண்டும் என்று. அப்போதுதான் கிராமத்திற்கு பணம் வரும்” என்று தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin