2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தமிழ் தரப்பினர் இனப்பிரச்சினையை கைவிட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திட்டம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கூட்டுறவு மீனவர் சங்கம் மற்றும் மக்கள் சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
“மூன்று தசாப்த போர் நிறைவடைந்த பின்னர் இந்தியாவின் அழுத்தம் காரணமாக தமிழ் தேசம் என்ற கோட்பாட்டை கைவிட்டு ஒற்றையாட்சியான சிங்கள பௌத்த ஆட்சிக்குள் ’13’ ஐ கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
’13’ ஐ அமுல்படுத்துவதில் தமிழ் தரப்பிற்கு இறுதிவரை எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்ற உண்மையை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடவையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ’13’ ஐ ஏற்றுக்கொள்வதாக எழுத்து மூலமாக வலியுறுத்தினர். 13 வலியுறுத்துவது தமிழ் தேச கோட்பாட்டை கைவிடுவதற்கு சமம்.
ஒற்றையாட்சி முறைமை சிங்கள வர்க்கத்தினருக்கு மாத்திரமே ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறது. இந்நாட்டில் சிங்கள மக்களின் ஆதிக்கமே அதிகளவில் காணப்படுகின்றது. எனவே சிங்கள தரப்பினர் முழு வீச்சுடன் தன் இனத்தின் வளர்ச்சிக்கே தங்களது பொருளாதார திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
கடந்த 75 வருடங்காலமாக வடகிழக்கு திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்களமயப்படுத்தும் வேலைத்திட்டங்களே நிறைவேற்றப்படுகின்றன.
இன்றைய சூழலில் பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள அரசாங்கம் புலம்பயர் தமிழர்களின் உதவியை கோருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக புலம்பெயர் சமூகத்தினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாட்டில் தமிழ் தரப்பினரால் இனப்பிரச்சினை தலைதூக்கும் என்ற நிலையிலேயே போர் நிறைவடைந்து 15 வருடத்திற்கு பின்னரும்கூட பாதுகாப்பிற்காக 15 வீதத்தை அரசாங்கம் பாதீட்டில் ஒதுக்கியுள்ளது.
தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை கைவிட்டு தாயகம் முழுவதும் சிங்களவர்களுடையது என ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலோ அல்லது தெற்கு எப்படி எங்களுடைய தேசமோ அதேபோல் வடகிழக்கு தமிழ் தரப்பினருடையது என சிங்கள ஆதிக்கவாதிகள் ஏற்றுக்கொள்ளும் பட்டத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவர முடியும்.
இறுதி முடிவினை மக்களே தீர்மானிக்கவேண்டும் என்பதே எமது நோக்கம்” என தெரிவித்தார்.