இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகரான அப்பிள்டன் தனது பதவிக்காலத்தை ஜனவரி முதல் வாரத்துடன் நிறைவு செய்யவுள்ளார். இதனையடுத்து அவர் நாடு திரும்பவுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அரசியல் முன்னேற்றங்கள் உட்பட பல விடயங்கள் குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமூக ஒற்றுமை மற்றும் புதிய அரசியலமைப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் கடைப்பிடித்த அணுகுமுறைகள் குறித்தும் பேசியதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, தனது பதவிக் காலம் இன்னும் இரு வாரங்களில் முடிவடையவுள்ள நிலையில், நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பல்வேறு முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேசி வருகின்றார்.
எவ்வாறாயினும், பதவி முடிந்து நாடு திரும்பும் மைக்கேல் அப்பிள்டன், நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சரின் சிரேஷ்ட வெளியுறவு ஆலோசகராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.