கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் இளைஞர்கள் அநாகரீகமாக நடந்துகொள்வதாக அதிகளவான முறைப்பாடுகள் பொதுமக்கள் மூலமாக கிடைத்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற இளைஞர்களை விசாரிக்க 80 சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இரண்டு மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் முறைப்பாட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் கொழும்பு மாநகர சபை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பூங்காவில் அநாகரீகமாக நடந்துகொள்பவர்களை பொலிஸாரிடம் அழைத்துச் சென்று எச்சரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்களை கைது செய்யவோ, எச்சரிக்கவோ பொலிஸாருக்கு உரிமை இல்லை என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு செய்தால் அது அரசியலமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவை மீறுவதாகவும் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இதன்மூலம் தன்னிச்சையான கைது நடவடிக்கைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் துணைபோவதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமது சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் உரிமை இளைஞர்களுக்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.