காணாமல் போன புடினின் முக்கிய எதிரி: ஆர்க்டிக் சிறையில் இருப்பதாக தகவல்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ரஷ்யாவின் யமல்-நெனெட்ஸ் பகுதியில் உள்ள ஆர்க்டிக் சிறைக் காலனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அலெக்ஸி நவல்னியின் சட்டத்தரணியால் அவரை பார்க்க முடிந்தது எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அலெக்ஸி நவல்னி குறித்து டிசம்பர் மாதம் முதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அவர் இருக்கும் இடம் மர்மமாகவே இருந்து வந்தது.

இதனையடுத்து அலெக்ஸி நவல்னி குறித்து பலரும் கவலை வெளியிட்டனர்.

“ரஷ்யாவின் சிறைச்சாலையில் காணாமல் போன அலெக்ஸி நவல்னியின் இருப்பிடம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், ஐநா உரிமைகள் நிபுணர் மரியானா கட்சரோவாவும் அலெக்ஸி நவல்னியின் “கட்டாயமாக காணாமல் போனமை” குறித்து கவலையை வெளிப்படுத்தும் குழுவில் இணைந்தார்.

டிசம்பர் ஆறாம் திகதி முதல் அலெக்ஸி நவல்னியை பார்க்கவோ, சந்திக்கவோ யாருக்கும் முடியாமல் போனது. இதனையடுத்து அவர் குறித்த செய்திகள் சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றது.

விளாடிமிர் புடினின் முக்கிய அரசியல் எதிரியான அலெக்ஸி நவல்னி, 2018 இல் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டார். அத்துடன், “தீவிரவாத” குற்றச்சாட்டின் பேரில் 2021 இல் 19 ஆண்டு சிறைத்தண்டனையும் பெற்றார்.

Recommended For You

About the Author: admin