மாத்தறை சிறை கைதிகள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாத்தறை சிறைச்சாலையில் நோய் அறிகுறிகளுடன் இருந்த மேலும் 8 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகள் மத்தியில் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன் மேலும் 8 சிறைக்கைதிகள் அதே அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் மேலும் 8 கைதிகள் நேற்று இரவு (23) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி மாத்தறை பொது வைத்தியசாலையில் தற்போது 16 கைதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் இருவர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கைதியின் உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், மூளைக் காய்ச்சல் காரணமாக குறித்த கைதி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கான விசேட தினங்களாக இன்றும் (24) நாளையும் (25) அறிவிக்கப்பட்டிருந்தது.

நோய் நிலைமை காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கும் நேரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin