சுமந்திரன், சிறிதரன் கடும் போட்டி: புலம்பெயர்ந்தோர் ஆதரவு சிறிதரனுக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவரை தெரவுசெய்யும் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

எதிர்வரும் ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரம் தலைவர் தெரிவும் கட்சியின் தேசிய மாநாடும் இடம்பெற உள்ளது.

தலைவர் பதவிக்கான போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தற்போது 90 வயது.

2001ஆம் ஆண்டு முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்து வரும் சம்பந்தன், தொடர்ந்து 22 வருடங்களாக கூட்டமைப்பை வழிநடத்தியுள்ளார்.

நீண்ட காலமாக உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக அவர் பொது அரசியல் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுவதில்லை. மாறாக சிவஞானம் சிறிதரன் தலைமையில் வடக்கில் கூட்டமைப்பின் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தெற்கில் பெரும்பாலான அரசியல் பணிகளை எம்.ஏ.சுமந்திரன் செய்து வருகிறார். இந்தப் பின்னணியில் தற்போது சம்பந்தன் தலைமைப் பதவியில் இருந்து விலகுமாறு கட்சிக்குள்ளேயே கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்காக சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் பெரும் போட்டி நிலவுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

சுமந்திரனா? சிறிதரனா?
ஸ்ரீதரனுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இருந்து அதிக ஆதரவு உள்ளது. அவர்கள் கட்சியின் சிரேஷ்டர்களுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், தமிழ்க் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சிறிதரனை நியமிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ஆனால், அமெரிக்கா உட்பட பல மேற்குலக நாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சுமந்திரன் தலைவராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.

வடக்கில் ஏற்கனவே தமிழ்க் கூட்டமைப்புடன் இருந்த பல சகோதர கட்சிகள் தனித்தனியாக அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதால், இந்தக் கட்சிகளை எல்லாம் ஒன்றிணைக்கக்கூடிய தலைவர் தமிழ்க் கூட்டமைப்பிற்குத் தலைவராக வரவேண்டும் என அனைவரும் நினைக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் கடந்த வாரம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட சுமந்திரன், கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைமைத்துவத்தை தெரிவு செய்ய வேண்டும். கூட்டமைப்பு ஜனநாயக அமைப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சுமந்திரன், தனக்கு தற்போது 60 வயதாகிறது. இன்னும் ஐந்து வருடங்களில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்றும் கூறினார்.

கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள் செய்த தவறுகளை செய்ய தாம் தயாரில்லை எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய மாநாடு நடைபெற உள்ளது. இதன்போதே கூட்டமைப்பினரும் தமிழரசுக் கட்சியினதும் புதிய தலைவர்கள் தெரிவுசெய்யப்பட உள்ளனர்.

Recommended For You

About the Author: admin