ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ் தரப்பு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: சுரேன் ராகவன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்களை தமிழ் கட்சிகள் பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியுடன் தமிழ் கட்சிகள் மூன்றுக்கும் மேற்பட்ட சந்திப்புகளை மேற்கொண்டுள்ளன. இந்த சந்திப்புகள் அனைத்தும் பல விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தன.

குறிப்பாக நேற்றைய சந்திப்பில் வலி வடக்கு காணிகள் விடுவிப்பது, மாகாண சபை நேரடி நிதிகளைப் பெறும் தொகையை அதிகரிப்பது, யாழ்ப்பாண விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் கிளிநொச்சி நவீன நகராக்கத் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு என்னை நியமித்துள்ளார்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் ஆராயப்பட்ட நிலையில் குறித்த விடயங்களை கையாள்வதற்கு விசேட நீதிபதிகளை உள்ளடக்கிய விசேட நீதிமன்றம் ஒன்றை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதுமட்டுமல்லாது மாகாண சபை அனுமதியுடன் உயர்கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து மூன்று வருடங்களின் பின் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆகவே ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்புக்களை தமிழ் கட்சிகள் உரிய வகையில் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்” எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin