கூட்டுறவு வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்காக உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் குழுவொன்றை நியமிப்பதற்கு வங்கித்தொழில் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
வங்கித்தொழில் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், கூட்டுறவு வங்கிகளில் பணத்தை வைப்புச்செய்த வைப்பாளர்களுக்கு பணத்தை மீளச்செலுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தெஹிவளை-கல்கிஸ்சை கூட்டுறவு சங்கம் முகங்கொடுத்துள்ள நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சனச சம்மேளனம் மற்றும் ஹோமாகம பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு குழு பரிந்துரைத்தது.
இந்நாட்டின் பொருளாதார நெருக்கடி, கூட்டுறவுச் சங்கங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், அதிகாரிகளால் எடுக்கப்பட்ட கவனக் குறைவான தீர்மானங்கள் மற்றும் கணக்காய்வுகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமை போன்ற நான்கு விடயங்கள் இதற்கு முன்னர் குழு கூடிய பல்வேறு சந்தர்ப்பங்களில் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், கூட்டுறவு வர்த்தகம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் மற்றும் மேலும் இரு அறிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதற்கு அமைய இந்த மூன்று அறிக்கைகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையை தயாரிப்பதற்காக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பிரதிநிதித்துவத்துடன் குழுவொன்றை அமைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கையை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, யதாமினி குணவர்தன மற்றும் பி.வை.ஜி.ரத்னசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.