ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக பெரேராவும் பொருத்தமான வேட்பாளராக இருப்பார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
”வற் வரி அதிகரிப்பால் மக்கள் பாரிய துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அந்த கஷ்டங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் வேலைத்திட்டமொன்றுக்கு அரசாங்கம் செல்ல வேண்டும்.
ஓர் அரசியல்வாதியாக எப்போதும் எமது அரசாங்கத்தை உருவாக்குவதே நோக்கமாக இருக்கும். நிச்சயமாக எமது அரசாங்கம் உருவாகும். அதற்கான பணிகள் இடம்பெறுகின்றன.
நான்கிற்கும் அதிகமான ஜனாதிபதி வேட்பாளர்கள் உள்ளனர். தம்மிக்க பெரேராவும் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. எமது கட்சியில் அவர் போட்டியிடுவது குறித்து எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட்டால் சிறந்த ஒரு வேட்பாளர்தான்.” என்றும் கூறினார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதில் தம்மிக்க பெரேராவின் பெயரும் இருப்பதாக கூறப்பட்டது.
பொதுஜன பெரமுனவுக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள பின்புலத்திலேயே மஹிந்த ராஜபக்ஷ, தம்மிக்க பெரேராவும் சிறந்த ஒரு வேட்பாளராக இருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார்.