நுவரெலியா வலய லிந்துலை கிளனிகள்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆசிரியை றோகினி கிளேரா தாக்கல் செய்திருந்த முறைப்பாடு கண்டியில் அமைந்துள்ள மனித உரிமை ஆனணக்குழு காரியாலயத்தில் நேற்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர்களான செந்தில் சிவஞானம், வேலு இந்திரச்செல்வன், காஞ்சனாதேவி கிருபாகர் ஆகியோர் ஆசிரியை சார்பாக கலந்துகொண்டனர்.
மற்றும் கிளனிகள்ஸ் பாடசாலை அதிபர் செல்வராஜா, லேக்கா ஓஷதி ஹேரத் (உதவி கல்வி பணிப்பாளர் திட்டமிடல் மற்றும் ஒழுக்காற்று) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இரு தரப்பினரது கருத்துக்களும் முன் வைக்கப்பட்ட நிலையில் அதிபர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெளிவானததை அடுத்து தீர்ப்பு ஆசிரியை சார்பாக வழங்கப்பட்டுள்ளது.
பெண் ஆசிரியர்களுக்கு இவ்வாறான இன்னல்கள் தற்போது கல்வி நிர்வாக சேவையினரால் இழைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய ஆணையாளர் ஆரம்பக்காலங்களில் இவ்வாறான இன்னல்கள் பொலிஸ் நிலையங்களில் இருந்தே கிடைத்ததாகவும் தற்போது அதிகமாக கல்வித்துறையில் இருந்து கிடைப்பது வருத்தத்தை தருவதாகவும் குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நிர்வாகத்தினரால் கொடுக்கப்படும் இன்னல்கள், தொந்தரவுகளை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
மீண்டும் இவ்வாறான செயற்பாடுக நடைப்பெற கூடாது எனவும் எதிர்வரும் 28.12.2023 ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியைக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் கையளிக்கப்பட்டு அவரது பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதற்காக எதுவித சலுகைக்காலமும் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்த ஆணையாளர் தவறும் பட்சத்தில் உயர்நீதிமன்ற ஆனணயை தவறியதாக கருதி மனித உரிமை ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பாடசாலை நிர்வாகத்தினுள் தீர்க்கக்கூடிய இவ்வாறான சிறிய பிரச்சினைகளை மனித உரிமைக்கு கொண்டு வரும் அளவிற்கு நடந்து கொள்வது நிர்வாகத்தினருக்கு அழகல்ல எனவும் ஆணையார் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறான செயற்பாடுகள் ஆணைக்குழுவின் காலத்தினை வீணடிப்பதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அதிபர் உட்பட்ட நிர்வாகத்தினரை ஆணையர் எச்சரித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு மாத சம்பளம் நிறுத்தப்பட்டமைக்கு நியாயம் கோரி ஆசிரியை ஒருவர் கண்டி மனித உரிமை ஆனணக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
உரிய காரணமின்றி இடைநிறுத்தப்பட்ட சம்பளத்தை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அதில் அவர் குறிப்பிட்டிருந்ததோடு இது தொடர்பாக பல முறை நுவரெலியா வலய கல்விப்பணிப்பாளர், மேலதிக வலயப்கல்விப்பணிப்பாளர், கிளனீகளஸ் தமிழ் வித்தியாலய அதிபர் ஆகியோருக்கு அறிவித்தும் தனக்குரிய சம்பளம் வழங்கப்படாமையினாலேயே அவர் மனித உரிமை ஆனணக்குவில் முறைப்பாடு செய்துள்ளார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திரசெல்வன் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் கடந்த 2016.5.16 அன்று தனது முதல் நியமனத்தை மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் நியமனதிற்கு அமைய அதி கஷ்ட பிரதேச பாடசாலையான நுவரெலியா கிளனீகள்ஸ் தமிழ் வித்தியாலத்திற்கு ஆசிரியர் உதவியாளராக நியமனம் பெற்று அங்கு சேவையாற்றி வந்தார்.
தொடர்ந்து தனது ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்ததன் பின்னர் 2019.10.1ஆம் திகதி நுவரெலியா மெரையா தமிழ் மகாவித்தியாலதிற்கு ஆசிரியர் சேவை 3.1 ஆசிரியராக மத்திய மகாண கல்வி அமைச்சின் செயலாளரின் நியமனகடிதத்திற்கு அமைய ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ள நிலையில் 2022.06.07ஆம் திகதி நுவரெலியா கல்வி தினணக்களத்தின் மேலதிக கல்விப்பணிப்பாளரினால் ஆசிரியர் இடமாற்ற சபை அனுமதியின்றி குறித்த ஆசிரியருக்கு மீண்டும் நுவரெலியா கிளனீகள்ஸ் தமிழ் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பபட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர், மத்திய மகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் போன்றவர்களின் கவனத்திற்கொண்டு வந்துள்ள போதும் மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தலையும் மீறி கடந்த இரண்டு மாதங்களாக குறித்த ஆசிரியைக்கு சம்பளம் நிறுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலையீட்டினால் இந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.