வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி இந்நாட்டில் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதற்கான அடிப்படைப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த சில வாரங்களில் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நபர்களின் சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பெரும் தொகையான சொத்துகள் அடையாளங்காணப்பட்டுள்ளன. அத்துடன் பெருந்தொகையான போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த 19ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“குடு அசங்க”, “லடியா” மற்றும் “குடு ஸ்ரீயானி” ஆகிய மூன்று பிரபல குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான 92 மில்லியன் சொத்துகள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
3 பேருந்துகள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், 5 வீடுகள், 50 பவுன் தங்கம் மற்றும் ரூ.123,000 நிதியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர், பாதுகாப்புப் படையினரால் இதுவரை 8,500 க்கும் மேற்பட்ட போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாத்திரம் 79 பெண்கள் உட்பட மொத்தம் 2,008 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘‘நாட்டின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை அகற்றி, போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்வரை சுற்றிவளைப்புகள் தொடரும்.‘‘ எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உறுதியளித்துள்ளார்.