இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது குழு நேற்று (18) இரவு இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்தக் குழுவில் 30 பேர் உள்ளடங்கி இருந்ததுடன், 20 பேர் கொண்ட மற்றுமொரு குழு இன்று (19) காலை இஸ்ரேல் சென்றுள்ளது.
அத்துடன், 30 பேர் கொண்ட மற்றுமொரு குழு இன்று (19) இரவு இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற விழாவில், இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்காக புறப்படும் முதல் தொகுதி தொழிலாளர்களுக்கான விமான டிக்கெட்டுகள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவால் வழங்கி வைக்கப்பட்டது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் இரண்டரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் மும்முனை தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
காசாவில் போர் தீவிரமாக இடம்பெற்றுவரும் பின்புலத்திலேயே இலங்கை தொழிலாளர்கள் குழு இஸ்ரேலுக்குச் சென்றுள்ளது.