ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் தம்மிக்கவா? ரணிலா?

2024ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்தாடல்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளன.

குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது தொடர்பாக பல குழப்ப நிலைகள் எழுந்துள்ளன.

ஆளுங்கட்சியின் வேட்பாளர் யார்? எழுந்துள்ள சிக்கல்
எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்படுவார் என அக்கட்சி அறிவித்துள்ளதுடன், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆளுங்கட்சிக்குள் காணப்படும் குழப்பங்கள் காரணமாக வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேராவை முன்னிறுத்த பசில் ராஜபக்ஷ மற்றும் நமல் ராஜபக்ஷ ஆகியோர் தேர்தலுக்கான திட்டங்களை வகுத்து வருவதாக ஆளுங்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

என்றாலும், அக்கட்சியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே பொறுத்தமான வேட்பாளராக இருப்பார் என்றும் அவருக்கே தாங்கள் ஆதரவு வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஜனவரியில் பிரசாரத்தை ஆரம்பிக்கும் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கான ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் கடந்த வாரம் பல முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஆளுங்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் பலர் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்க உள்ளனர்.

பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, திலும் அமுனுகம, ஷெஹான் சேமசிங்க, கனக ஹேரத், பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோர் பிரச்சாரத்தின் முக்கியஸ்தர்களாக இருப்பார்கள் எனவும் பிரசாரத்தை வழிநடத்துபவராக சாகல ரத்நாயக்க செயற்பட உள்ளார்.

பொதுத் தேர்தலா? ஜனாதிபதி தேர்தலா?
ஜனாதிபதியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கான நபர்களின் பெயர்கள் குறித்து ஆளுங்கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், எதிர்வரும் ஆண்டில் முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா என்ற விடயம் பற்றி இன்னும் தெளிவான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தீரும் வரை எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் எனக் கூற முடியாதென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுத்து மாற்று வேட்பாளர் ஒருவரை களமிறக்க பொதுஜன பெரமுன முயற்சித்தால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணத்தில் ஜனாதிபதி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended For You

About the Author: admin